வியாழன், 7 பிப்ரவரி, 2019

மௌனம் என்றொரு தேசம்

மௌனம் என்றொரு தேசம்
=========================================ருத்ரா

சட்டென்று
கேட்க முடியவில்லை.
இதே தவிப்பும் பரபரப்பும்
அவளிடமும் தெரிகிறது.
ஆனால்
இதை கேட்டுவிட வேண்டுமென்று
நான் கண்களை
உயர்த்தியது போல்
அவள் இன்னும்
ஏறிட்டு நோக்கவே இல்லையே!
ஆனால் அந்தக்கேள்வியின்
தூண்டில் முள்
அவள் ஆழத்தில் விழுந்து
அது ஏற்படுத்திய காயம்
அவள் உள்ளத்தில்
ரத்தக்கடலை கொந்தளித்தது.
அந்த சிவப்பு
கவிழ்ந்த அவள் முகத்தில் கூட‌
ஒரு அழகு ஊட்டியது.
அது அழகா?
அவளுக்கு அல்லவா தெரியும்
அது கழுமரத்தின்
கூர்முனை என்று!
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
என்று
நான்கு கதவுகள் வைத்து
நாலாயிரம் பூட்டுகள் அல்லவா
மாட்டி வைத்துக்கொண்டிருக்கிறாள்!
அமுதம் கசியும் அந்த‌
கேள்வி
இன்னும் தெறிக்கவே இல்லை
எங்களிடையே!

=======================================================


வியாழன், 15 பிப்ரவரி, 2018

ஓஷோ

ஓஷோ
===============================ருத்ரா

அறிவு கொஞ்சம் கூர்மை தீட்டி
காமக்காடுகளை
பிருந்தாவன தோட்டம் ஆக்கி
கடவுளர்களுக்குப்பதில்
இந்த மனிதர்களை அங்கே
ஓட விட்டு
தன் ரன்னிங்க் கமெண்ட்ரியை
புத்தகங்களாக்கினாலும் போதும்
டாலர்கள் குவியும்.
இவர்களுக்கு
"செக்ஸில் பூஜை"
சில ஆங்கில ஃ பிரேஸ் களுடன்
எழுதிக்காட்டினால் போதும்.
"பெஸ்ட் செல்லர் " வரிசைக்குப் போய்விடும்.
சம்ஸ்கிருத வார்த்தைச்  சிணுங்கலுடன்
சில பத்திகளை
செருகி விட்டால் போதும்
இந்திய அறிவு ஜீவிகளுக்கு
செமத்தீனி தான்.
மறந்தும்
சமுதாய ப்ரக்ஞை
அது இது என்று
இந்த ஞானி
எழுத்துக்களை உருட்ட விடுவதில்லை.
அப்படி எழுதினாலும்
உலகத்திலேயே உயர்ந்த ஞானம்
"தனித்துவம்" தான் என்பார்.
பொது நீதி சம நீதி எனும்
ஆபாசங்களை கலக்கல் ஆகாதென்பார்.
உடற்கலவிகளால்
உயிர் கழுவிக்கொள்ளலாம் என்பார்.
சமுதாய வலைகளை
அறுத்தெறிந்து
"ஆத்மா" என்ற மாய வனம்
புகுந்திடுங்கள் என்பார்.
அழுகிய மதக்கருத்துகளுக்கு
அலங்காரம் செய்வதே
அவர் எழுத்துக்களின் வேலை.
மேட்டுக்குடி மக்களின்
புத்தக அலமாரியை
இந்த குப்பைக்கிடங்குகள் தான்
"இன்டீரியர் டெக்கரேஷன்" என்ற பெயரில்
ரொப்பிக்கொள்கின்றன.
என்ன
உங்கள் மூளைக்காட்டிலும்
இந்த "சீக்குப்"பிடித்த
மேகக்கூட்டங்கள் தானா?
இந்த வெற்று இலைக்காகிதங்களைத்
தின்று கொழுக்கும்
"புழுக்கூட்டு"மண்டலங்களாய்
தொங்கித் தூங்காதீர்கள்
ஓ! அறிவு ஜீவிகளே!
சமுதாய முரண்களை
அக்கினிச் சிறகுகளின்
இலக்கியங்கள் ஆக்கும்
மறு பக்கம் நோக்கி
கொஞ்சம்  ஊர்ந்து வாருங்கள்.
இந்த "ஃ பேண்டாசி" பலூன்களில்
ஊஞ்சல் ஆடும்
ஏமாற்று வித்தைகள்
போதும்!போதும்!

=======================================================





சனி, 7 அக்டோபர், 2017

சிறகுகள்


A. P. J. Abdul Kalam
A. P. J. Abdul Kalam in 2008.jpg
https://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam


சிறகுகள்
====================================ருத்ரா

புழு பூச்சிகள் கூட
நசுக்கப்படும் வரை
சிலிர்த்துக்கொண்டு தான்
இருக்கின்றன.
முடியும் வரை தன்னை
மிதிக்கும்
கால் கட்டை விரல்களை
எதிர்த்து
தன்னிடம் இருக்கும்
மிருதுவான
கொடுக்குகளையும் கொண்டு
குடைச்சல் கொடுக்கத்தான்
செய்கின்றன.
மனிதன் ஏன் இப்படி
கல் பொய்மை சாமிகளின் முன்னே
கூழாகிப்போகிறான்.
அறிவின் கூர்முனை
தன்னிடம் இருக்கும்போது
இந்த சாதி மதப்பேயாட்டங்களுக்கு
இரையாகிப்போவதேன்?
டிவி சினிமாக்களின் முன்
மரவட்டைகளாய்
மல்லாந்து கிடப்பதேன்?
சிந்தனையின் மின்னல் கீற்றுகள்
அவனுள்
இடி இடிக்கத்தளும்புகையில்
அரசியல் ஜிகினாக்களில்
அடைபட்டுக்கிடப்பதேன்?
உண்மையான அரசியலின்
மனித முகம் இழந்துபோன
ஓட்டுகள்
எனும் பாப்கார்ன்களில்
கனவுகளை கொறித்துக்கொண்டே
நனவுகளின் கசாப்புக்களில்
செதில் செதிலாய்
சிதறிக்கொண்டிருப்பதேன்?
ஓ! காகிதப்புழுக்களே!
இந்த தேர்தலின் தேர்க்காலில்
வாக்கு இறந்து
நசுங்கிப்போகுமுன்
மாமேதை அப்துல் கலாம்
உங்கள் உள்ளத்தில் ஒட்டிக்கொடுத்த
அக்கினிச்சிறகுகளை
கொஞ்சம்
அலை விரியுங்கள்.

=====================================

திங்கள், 2 அக்டோபர், 2017

"போதும் எழுந்து வா"

"போதும் எழுந்து வா"
(நடிகர் திலகம்..நினைவுக்கவிதை)
=======================================================ருத்ரா

(நடிகர் திலகம் செவேலியர் சிவாஜி கணேசன் அவர்கள்
தமிழகத்தை ஒரு சோகவெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு
அமரர் ஆகியது குறித்து எழுதிய கவிதை)



நடிப்பின் இமயமே !
இது என்ன நடிப்பு !

"மரணத்தை
இது வரை நான் காட்டியது
வெறும் அபிநயம் தான்.
இதோ
உயிர்த்துடிப்பான
ஒரு மரணத்தைப்பார்"..என
அந்த மரண தேவனுக்கு
நடித்துக்காட்ட..உன்
துடிப்பை நிறுத்தினாயா ?

"கண்ணீர் வெள்ளமாவது பெருகட்டும் "...
இந்த குடிதண்ணீர் பிரச்சினை தீர..
என்று
தலை சாய்ந்து விட்டாயா ?
தென்மேற்கு பருவக்காற்று வீசவில்லை.
வடகிழக்கும்
சென்னையின் வாசலுக்கு
இன்னும் வரவில்லை.


எல்லோரையும்
அலங்காரித்து
ஓய்ந்து போன விருதுகள்
உன்னிடம்
அலங்காரம் பெறுவதற்கு
தயங்கி தயங்கி
வந்தபோது
அவை புரிந்து கொண்டன..
திண்ணைப்பள்ளிகூடங்களையெல்லாம்
தாண்டி
ஒரு பல்கலைக்கழகத்தின்
படியேறிக்கொண்டிருக்கிறோம் என்று.


பிரம்மன் கூட
ஆச்சரியப்பட்டு போனான்.
"இந்த மனிதனை
ஒரு தடவை தானே
படைத்தேன்.
எப்படி
இவன் பல நூறு தடவைக்கும் மேல்
பிறப்பு எடுத்தான் "என்று.
ஆம்
நீ நூற்றுக்கணக்கான
படங்களில் அல்லவா
உயிர் காட்டி இருக்கிறாய்.


நடிப்பு எனும் எல்லைக்கு
எதிரி நீ.
அதனால் வானம் கூட
வெட்கப்பட்டு
உன் மடியில் விழுந்தது.
அந்த பரிமாணத்தை தேடி
எல்லைக்கு
அப்பாலும்..இந்த
'அப்பல்லோவில் '
உன் இறுதிப்படப்பிடிப்பை
வைத்துக்கொண்டாயா ?


'பாசமலரில்'
பிழிந்து காட்டினாயே
ஒரு மரணத்தை..
அப்போது ஏமாந்துபோய்
வீசிய எமனின்
பாசக்கயிறு
இப்போது மீண்டும்
எப்படிவிழுந்தது உன்னிடம் ?


இப்போதும்
அவன் ஏமாந்துதான் போனான்.
இப்போது
நீ நடித்துக்காட்டியது
ஒரு மரணத்தின்
மரணத்தை.

உனக்கு மரணம் இல்லை.
நிஜம் எது ? நிழல் எது ?

"போதும்.எழுந்து வா."

டைரக்டர் 'கட் ' சொல்லிவிட்டார்.

போதும் எழுந்து வா.

இந்த தமிழகம் இனி தாங்காது.

========================================================ருத்ரா

(ஜூலை 22 2001  "திண்ணை" இத‌ழில் ருத்ரா எழுதிய‌து)

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

மூன்று கவிதைகள்




மூன்று கவிதைகள்
============================================
ருத்ரா



நியாயங்கள்


என்ன செய்து விடப்போகிறாய்?
கிழிச்செ!
இது என்ன‌
அவமானமா?
ஆவேசமா?
அலட்சியமா?
தராசு தட்டு அசைவுகள் கூட‌
இங்கு வெறும் 
ஃபாசில்கள்.

_______________________________________



கீதை


ஒரு கன்னதில் அறைந்தால்
இன்னொரு கன்னத்தில் காட்டு.
முதல் கன்னம்
உன்னுடையது!
இரண்டாவது கன்னம்
அவனுடையது.

_______________________________________________


வாய்தா


காலத்தின்
முதுகெலும்பு
வளைந்து வளைந்து
நொறுங்கியே போனது.
சுத்தியலுக்கும் வலிக்கவில்லை.
மேஜைக்கும் வலிக்கவில்லை.
ஆர்டர்! ஆர்டர்!

_________________________________________________


ஞாயிறு, 31 ஜூலை, 2016

துகில்



துகில்
====================================ருத்ரா இ.பரமசிவன்.

கை சோர்ந்ததாமே
துச்சாதனனுக்கு!
வெண்பட்டு உடுத்திய
ஜன நாயகத்தை
துகிலுரிக்க
கருப்புத்துச்சாதனர்களுக்கு
கை சோர்ந்துபோகவே இல்லை.
இங்கே
வேர்வை அருவிகள் உண்டு.
வெந்து போக உடல்களும் உண்டு.
மக்கள் எனும்
மலிவுப்பதிப்பில்
ஜன நாயகம்
இங்கே
எண்ணிக்கையில் பெரும்பான்மை.
சிந்தனையில் சிறுபான்மை.

=============================================